மரகத மயில், மரகத கணபதி.. சிறுவாபுரி முருகன் கோவில் சிறப்புகள்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியரை மனமுருகி வேண்டி வந்தால், சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு அமையும் என்பது நம்பிக்கை.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோ மீட்டரில் இடது பக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் உள்ளது. இந்த தோரண வாயிலில் இருந்து 3 கிலோ மீட்டர் சென்றால் சின்னம்பேடு என அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் ஆலயத்தை சென்றடையலாம்.
இக்கோவிலில் கொடி மரத்துக்கு முன்னால் மரகதப் பச்சை மயில் (முருகப் பெருமானின் வாகனம்) வீற்றிருக்கிறது. இதுபோல் சிறந்த வடிவமைப்புள்ள மரகத மயில் உலகில் வேறு எங்கும் இல்லை என உறுதியாக கூறலாம். கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகத கல்லில் சூரியனார் ஒளி வீசிக்கொண்டு இருக்க, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்டு கம்பீரமான ராஜகணபதி மரகத கல்லில் பச்சை பசேல் என மின்னிட மரகத விநாயகர் என்ற நாம கரணத்துடன் வேண்டுவதை அளிக்கும் அழகுக் கோலத்துடன் வீற்றிருக்கிறார்.
பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், ஆதிமூலவர் (முன் இருந்த பாலசுப்பிரமணிய சுவாமியின் விக்ரகம்) நாகர், பைரவர், நவக்கிரகம் என பரிவார தேவதைகள் புடைசூழ , கருவறையில் பாலசுப்பிரமணியர் அருள்புரிகிறார். இங்கு நவக்கிரகம் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பது சிறப்பாகும்.
இந்த ஆலய இறைவனான பாலசுப்பிரமணியரை மனமுருகி வேண்டி வந்தால், சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தல மூலவரை செவ்வாய்க்கிழமை தோறும், தொடர்ந்து ஆறு வாரங்கள் வழிபாடு செய்து, வள்ளி மணவாளப் பெருமானை வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கும். செல்வ வளம் பெருகும், நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை.