திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று நடைபெற்றது.;
திருவண்ணாமலை,
ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு மார்கழி திருவாதிரையில் அருணோதய கால பூஜை, மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜை, சித்திரை திருவோணத்தில் மதியம் பூஜை, ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை, ஆவணி வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை ஆகியவை மிகவும் விசேஷமானது.
அதன்படி சிவாலயங்களில் எழுந்தருளிய நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது. ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரத்துடன் ஆனி திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் எழுந்தருளி உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சிறப்பு ஆராதனை நடந்தது.
தொடர்ந்து இன்று காலை நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 9.20 மணி அளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. அப்போது சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். பின்னர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் ஆயிரங்கால் மண்டபத்தின் வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து பக்தர்கள் மத்தியில் ஆடியபடி வந்த நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் கோவிலின் 5-ம் பிரகாரம் வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு மாட வீதியில் உலா வந்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.