ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்திவிட முடியாது - உக்ரைன் அதிபர்

நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கலந்து கொண்டார்.;

Update: 2024-09-26 00:20 GMT

நியூயார்க்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2½ ஆண்டுகள் ஆகி விட்டன. போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

3 நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி 3-வது முறையாக சந்தித்து பேசினார். அமைதி தீர்வுக்கு உதவுவதாக உறுதி அளித்தார். இந்நிலையில், நியூயார்க் நகரில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியதாவது:-

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான எனது செயல்திட்டத்துக்கு 100-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போரில் ஈடுபட்ட நாடுகளும் அதில் அடங்கும். ஆனால், சில நாடுகள் அந்த திட்டத்துக்கு மாறான சில திட்டங்களை பரிந்துரைக்கின்றன. அவை நிதா்சனத்துக்கு அப்பாற்பட்டு இருப்பதோடு, போரைத் தொடர புதினுக்கு உதவும் வகையில் உள்ளன. எனவே, உண்மையான அமைதி ஏற்படுத்தக்கூடிய திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

புதின் செய்து கொண்டிருப்பது சர்வதேச குற்றம். அவர் எண்ணற்ற சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளார். அவர் தானாக போரை நிறுத்த மாட்டார். ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் போரை நிறுத்திவிட முடியாது. போர் எளிதாக நிற்காது.

அதற்கு ரஷியாவை அமைதி தீர்வுக்கு தள்ள உலகளாவிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே ஆக்கிரமிப்பாளர் மற்றும் ஐ.நா. விதிகளை மீறியவர் என்ற அடிப்படையில், ரஷியா மீது இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை ஒவ்வொரு நாடும் மதிக்க வேண்டும் என்ற ஐ.நா. பிரகடனத்தை ரஷியா பின்பற்றச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்