விண்வெளி நிலையத்தில் தேங்க்ஸ் கிவ்விங் டே கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்- வீடியோ
விண்வெளி நிலையத்தில் இருந்து நாசா விஞ்ஞானிகள் பூமியில் உள்ள விஞ்ஞானிகளுடன் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று நன்றி செலுத்துதல் நாள் (தேங்க்ஸ் கிவ்விங் டே) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று (28.11.2024) தேங்க்ஸ் கிவ்விங் டே கொண்டாடப்பட்டது.
நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி தேங்க்ஸ் கிவ்விங் டே கொண்டாடி உள்ளார். அவர், வீடியோ வாயிலாகப் பூமியில் உள்ளோருக்கு தேங்க்ஸ் கிவ்விங் வாழ்த்து தெரிவித்தார். பூமியில் உள்ள நாசா விஞ்ஞானிகளும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. தேங்க்ஸ் கிவ்விங் விருந்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினருக்கு மசித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள், வான்கோழி கறி, கிரான்பெர்ரி, பச்சை பீன்ஸ், ஆப்பிள் கோப்லர், காளான்கள் உணவாக வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் முதன் முதலில் நன்றி செலுத்தும் நாள் 1621ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. யாத்ரீகர்களும் பூர்வீக அமெரிக்கர்களும் அறுவடையை கொண்டாடுவதற்காக ஒன்றுகூடினர். இந்நிகழ்வு குடியேறியவர்களுக்கு நிலத்தை பயிரிடவும், கடுமையான குளிர்காலங்களில் இருந்து தப்பிக்கவும் உதவிய பூர்வீக அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்தது.
அதாவது, முந்தைய ஆண்டு அமெரிக்காவிற்கு வந்த யாத்ரீகர்கள், கடுமையான குளிர்காலம் மற்றும் வளங்கள் இல்லாததால் உயிர் பிழைக்க போராடினர். அப்போது, பூர்வீக அமெரிக்கர்கள் அவர்களுக்கு உதவி செய்துள்ளனர். அவர்களின் உதவியுடன், பயிர்களை எவ்வாறு பயிரிடுவது மற்றும் தங்களை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பதை அவர்கள் கற்றுக்கொண்டனர்.
இதனால் பூர்வீக அமெரிக்கர்களுக்கு தங்கள் நன்றியுணர்வைக் காட்ட, யாத்ரீகர்கள் மூன்று நாள் விருந்து வைத்தனர். அதில் வான்கோழி, சோளம், பூசணி மற்றும் பிற உணவுகள் அடங்கும். அதன்பின்னர் பாரம்பரியமாக இந்த அறுவடை திருநாள், நன்றி செலுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த அறுவடைத் திருவிழாவானது தேசிய விடுமுறையாகவும் உருவானது.
அமெரிக்கா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி மற்றும் சில நாடுகளிலும் தேங்க்ஸ் கிவ்விங் டே கொண்டாடப்படுகிறது.