ரஷியா மீது 140க்கும் மேற்பட்ட டிரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்திய உக்ரைன்

உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது

Update: 2024-09-10 09:23 GMT

மாஸ்கோ,

உக்ரைன் மீது கடந்த 2022ல் ரஷியா போர் தொடுத்தது. இரண்டரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில், முக்கிய நகரங்களின் மீது இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே ரஷியா மீதான வான்வழி தாக்குதலை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்தை இலக்காகக் கொண்டு உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட 140 க்கும் மேற்ப்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்) ரஷிய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. போர் தொடங்கிய பிறகு உக்ரைனால் நடத்தப்பட்ட மிகப்பெரிய டிரோன் தாக்குதலில் இது 2-வது ஆகும்.

மாஸ்கோவிற்கு வெளியே ராமென்ஸ்காய் நகரில் இரவு நேரத்தில் உக்ரைனின் 2 டிரோன்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை தாக்கியதாக மாஸ்கோ பிராந்திய கவர்னர் ஆண்ட்ரி வோரோபியோவ் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் ஒரு பெண், 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாஸ்கோவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது டிரோன் குப்பைகள் விழுந்ததில் அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்துள்ளார். கடந்த 1-ம் தேதி உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட 158 ஆளில்லா விமானங்களை ஒரே இரவில் ரஷிய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்