இஸ்மாயில் ஹனியே கொலை; புதிய தலைவர் யார்? ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பு
இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
காசா முனை,
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டது.
ஆனால், 110க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே (வயது 62) ஈரானில் கடந்த 31ம் தேதி கொல்லப்பட்டார். ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தபோது ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தார். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய தலைவரை ஹமாஸ் ஆயுதக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். யாஹ்யா சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்து வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் தேதி தாக்குதலுக்கு திட்டமிட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் யாஹ்யா சின்வாரும் முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.