மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் வெள்ளம் - 30 பேர் உயிரிழப்பு

மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.;

Update:2024-12-03 16:51 IST

Image Courtesy : AFP

கோலாலம்பூர்.

மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட அதிக அளவு மழை கடந்த 5 நாட்களில் கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள பல்வேறு இடங்களில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கனமழையால் மலேசியாவின் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய சுமார் ஒரு பில்லியன் ரிங்கிட்(224 மில்லியன் டாலர்) செலவாகும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்பு படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதே போல் தெற்கு தாய்லாந்திலும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட 491 நிவாரண முகாம்களில் சுமார் 34 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது மழைப்பொழிவு சற்று குறைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருகிறது. ஆனால் அடுத்த ஓரிரு நாட்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்