ஆபாச நடிகைக்கு பணம் அளித்த வழக்கு: டொனால்டு டிரம்ப் விடுவிப்பு

வரும் 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.;

Update:2025-01-10 21:15 IST

வாஷிங்டன்,

ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டோமி டெனியல்ஸ், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார்.

கடந்த 2006-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக ஸ்டோமி டெனியல்ஸ் குற்றஞ்சாட்டினார். மேலும் 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தன்னுடனான பாலியல் உறவு விவகாரத்தை வெளியே கூறக் கூடாது என்பதற்காக டிரம்ப் தனக்கு பணம் கொடுத்ததாகவும் ஸ்டோமி டெனியல்ஸ் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு திரட்டப்பட்ட நிதியில் இருந்து டொனால்டு டிரம்ப் போலி வணிக பதிவுகளை உருவாக்கி 1,30,000 அமெரிக்க டாலர்களை ஸ்டோமி டெனியல்சுக்கு கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் டிரம்பிற்கு எதிராக பண மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் மன்ஹாட்டன் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து டொனால்டு டிரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்படுவதாக கோர்ட்டு தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்ட போதிலும் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். டொனால்டு டிரம்ப் வரும் 20 ஆம் தேதி அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு இந்த தீர்ப்பு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்