அமெரிக்காவுடன் கனடா ஒருபோதும் இணையப் போவது இல்லை: ஜஸ்டின் ட்ரூடோ
அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணையலாம் என்று டொனால்டு டிரம்ப் கூறிவருகிறார்.;
ஒட்டவா,
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார். சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் ஆதரவை இழந்ததால் ஜஸ்டின் ட்ரூடோ இந்த முடிவை எடுத்தார். இந்தாண்டு இறுதியில் கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது. கனடாவில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை ஜஸ்டின் ட்ரூடோவே பிரதமராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக, கனடா இணையலாம் என்று அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப் பேசி வருகிறார். அமெரிக்கா உடன் இணைவதை கனடா மக்களே விரும்புவார்கள் எனக்கூறிய டிரம்ப், வரிகள் குறையும், வர்த்தக பற்றாக்குறை இருக்காது, கனடா பாதுகாப்பாக இருக்கும். அத்துடன், அமெரிக்கா பெரிய தேசமாக மாறும், ஒன்றிணைவோம் என கூறியிருந்தார்.
டிரம்பின் இந்த கருத்து தொடர்பாக தனது மவுனத்தை கலைத்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா மாறும் வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:- டொனால்டு டிரம்ப் கூறுவது ஒருபோதும் நடக்க போவது இல்லை. கனட மக்கள் கனடா குடிமக்களாக இருப்பதிலேயே பெருமை கொள்கிறார்கள். நாங்கள் அமெரிக்கர்கள் இல்லை. மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் டிரம்ப் இவ்வாறு பேசி வருவதாக நான் கருதுகிறேன்" என்றார்.