பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிய தடை - சுவிட்சர்லாந்தில் அமலுக்கு வந்த சட்டம்
சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிய தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.;
பெர்ன்,
சுவிட்சர்லாந்து நாட்டில் மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிய தடை விதிப்பது குறித்து கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடையை அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டுமென பெரும்பாலானோர்(51 சதவீதம்) ஆதரவு அளித்தனர். இதையடுத்து, இது தொடர்பாக அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் 6ம் தேதி புதிய சட்டத்தை நிறைவேற்றியது. அந்த சட்டம் 2025 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிவதை தடை விதிக்கும் சட்டம் சுவிட்சர்லாந்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறி பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிந்து செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிந்து சென்றால் அந்நாட்டு பணத்தில் 100 பிரன்சிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும். அபராத தொகையை உடனடியாக செலுத்தவில்லையென்றால் 1000 பிரன்சிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 1 லட்ச ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.
அதேவேளை விமானங்கள், தூதரகங்கள், மதவழிபாட்டு தலங்கள், முகத்தை மறைக்காவிட்டால் உடல்நல ரீதியில் பிரச்சினைகள் ஏற்படும் பகுதிகளில் இந்த சட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.