விசிட் விசாவில் வேலைதேடி அபுதாபி சென்ற கேரள வாலிபரின் கண் பார்வை பாதிப்பு
அபுதாபியில் விசிட் விசா மூலம் வேலை தேடி சென்ற கேரள வாலிபரின் கண் பார்வை பாதிக்கப்பட்டது.
அபுதாபி,
கேரளாவின் தெற்கு பகுதியை சேர்ந்த வாலிபர் சுனில், அபுதாபியில் வேலைவாய்ப்பு தேடி கடந்த 2022-ம் ஆண்டில் விசிட் விசாவில் வந்தார். அவர் பல இடங்களில் வேலை தேடியும் அவருக்கு முறையான வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் விசிட் விசாவுக்கான காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அவரது கண் நரம்பு பாதிக்கப்பட்டு ஒரு கண்ணின் பார்வையை இழந்தார். மேலும் மற்றொரு கண்ணின் பார்வையும் படிப்படியாக குறைந்து வந்தது. ஒவ்வொரு நாளும் உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்ததால், சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடிவு செய்தார்.
விசா காலம் முடிந்த பின்னர் தங்கியிருப்பதால் அபராதம் செலுத்தவும், விமான டிக்கெட்டுக்கான பணமும் அவரிடம் இல்லை. இதனால் சுனில் இந்திய தூதரகத்தின் உதவியை நாடினார். தூதரக அதிகாரிகள் சுனிலின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்தனர். அவர் சொந்த ஊர் திரும்பி செல்ல அமீரக அரசுத்துறை அதிகாரிகளின் தடையில்லா சான்றிதழை பெற்றனர். மேலும் அவருக்கு விமான டிக்கெட்டையும் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சுனில் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பினார்.
இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரி கூறுகையில், "அமீரகத்துக்கு வருபவர்கள் விதிமுறைகளை சரிவர கடைப்பிடிக்க வேண்டும். விசா காலத்துக்கான அளவை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்" என தெரிவித்தார்.