தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?
இன்று (வியாழக்கிழமை) முதல் 2-ந் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்ததால், புயலாக உருவாவதில் தாமதம் ஆனது. மழையின் தாக்கமும் குறைந்தது. இந்த சூழலில் வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடித்து வந்தது.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30-ம் தேதி (நாளை மறுதினம்) காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கரையோரமாக நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில்புயலாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது.
அவ்வாறு உருவானால் அதற்கு 'பெங்கல்' என்ற பெயர் சூட்டவும் முடிவு செய்யப்பட்டது. பெங்கல் புயல் உருவாகி வட தமிழக கடற்கரை நோக்கி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக வங்கக்கடலில் வலுப்பெற்றாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு வரும்போது வலு இழந்து தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என தெரிகிறது.
இதனிடையே கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டு இருந்த அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றது.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் 2-ந் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவித்து இருக்கிறது
இதில் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம் (சனிக்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 2-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
புயல் சின்னம் காரணமாக, இன்று தமிழக கடலோர மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்திலும், நாளையும், நாளை மறுதினமும் வட தமிழக கடலோரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.