தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' - இன்று பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு

Update: 2024-11-28 00:50 GMT
Live Updates - Page 2
2024-11-28 04:38 GMT

புயல் சின்னம்: புதுச்சேரி, நாகையில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்


புதுச்சேரி

வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனிடையே புதுச்சேரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லக் கூடாது என்று அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தி உள்ளார். காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அத்துமீறி கடற்கரைக்கு செல்வோரை எச்சரித்து வருகின்றனர். 


நாகப்பட்டினம்

நாகையில் நம்பியார் நகர் உள்ளிட்ட கடற்கரைப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடற்கரைப்பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்தை உணராமல் மக்கள் கடற்கரையில் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024-11-28 03:52 GMT

வங்கக்கடலில் உருவாக உள்ள பெங்கல் புயல்: தயார்நிலையில் இந்திய கடற்படை



பெங்கல் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு நடவடிக்கையை செய்ய தயார்நிலையில் உள்ளதாகவும்,  பாதிக்கப்படும் பகுதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராகி வருவதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்படி மாநில அரசு மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப்பணிகளை செய்ய தயார் நிலையில் உள்ளதாகவும், உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெள்ளநிவாரண குழுக்கள், டைவிங் குழுக்கள் உள்ளிட்டவையும் தயார்நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2024-11-28 03:33 GMT

நகரத் தொடங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்





வங்கக் கடலில் புயல் உருவாவது மேலும் தாமதமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த சில மணி நேரங்களாக நகராமல் நின்றிருந்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகரத் தொடங்கி உள்ளது.

இதன்படி, புதுச்சேரிக்கு தென் கிழக்கே 410 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு தென் கிழக்கே 480 கி.மீ. தூரத்திலும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2024-11-28 03:25 GMT

காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு



விழுப்புரம்,

கடலூர்,

மயிலாடுதுறை,

நாகப்பட்டினம்,

திருவாரூர்,

தஞ்சாவூர்,

புதுக்கோட்டை,

ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை இடி, மன்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

2024-11-28 03:23 GMT

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்



பெங்கல் புயல் இன்று உருவாகி வட தமிழக கடற்கரை நோக்கி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக வங்கக்கடலில் வலுப்பெற்றாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு வரும்போது வலு இழந்து தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என தெரிகிறது. இதனிடையே கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டு இருந்த அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

2024-11-28 03:18 GMT

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30-ம் தேதி கரையைக் கடக்கும் - வானிலை ஆய்வு மையம்



தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்ததால், புயலாக உருவாவதில் தாமதம் ஆனது. மழையின் தாக்கமும் குறைந்தது. இந்த சூழலில் வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடித்து வந்தது.

இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30-ம் தேதி (நாளை மறுதினம்) கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி காரைக்கால்- மாமல்லபுரம் இடையே வரும் 30ம் தேதி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைவரப்படி, இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கில் 100 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 410 கி.மீ. தூரத்திலும், சென்னை தென் கிழக்கே 490 கி.மீ. தூரத்திலும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கரையோரமாக நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில்புயலாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு உருவானால் அதற்கு 'பெங்கல்' என்ற பெயர் சூட்டவும் முடிவு செய்யப்பட்டது. பெங்கல் புயல் உருவாகி வட தமிழக கடற்கரை நோக்கி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த புயல் வலுவிழந்து 30-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்க உள்ளது. அப்போது 50-60 கி.மீ. வரை தரைக்காற்று வீசக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வுகள் காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 2-ந் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

புயல் சின்னம் காரணமாக, இன்று தமிழக கடலோர மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்திலும், நாளையும், நாளை மறுதினமும் வட தமிழக கடலோரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்