லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும்.
அதேபோல், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. மேலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை (புதன்கிழமை) அல்லது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புகள் உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கனமழை பெய்த நிலையில் இன்று காலை மீண்டும் கனமழை பெய்யத்தொடங்கியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.