சென்னை- பரங்கிப்பேட்டை இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு - வெளியான தகவல்
சென்னையில் வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
காற்றழுத்த தாழ்வு மண்டலம்/புயல் நவம்பர் 30ம் தேதிக்குள் பரங்கிப்பேட்டை, கடலூர் மற்றும் சென்னை இடையே கரையை கடக்கக்கூடும்.
வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை பகுதியில் கனமழை பெய்யும். சென்னைக்கு தெற்கே காற்றழுத்தம் நகர்ந்து வருவதால், சென்னையின் நீர்ப்பிடிப்புக்கு ஏற்ற மழையாக இது அமையும்.
சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை (28-ம் தேதி) - சென்னையில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (29-ம் தேதி) சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
30-ம் தேதி - சென்னையில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 1ம் தேதி - சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 2ம் தேதி - சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை / புயல் கரையை கடந்த பிறகு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலம் உள்ளிட்ட உள் மாவட்டங்கள் மழையை அனுபவிக்க முடியும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தொடர்கனமழையால் வாய்க்கால் உடைந்து ஆலங்குடி, குளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல்களில் தன்ணீர் புகுந்தது. கொட்டும் மழையில் மணல் மூட்டைகளை கொண்டு விவசாயிகளே உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்து வருகின்றனர். தொடர் கனமழையால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 6 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கடலூரில் கனமழை - தயார் நிலையில் மீட்புக்குழு
கடலூரில் மழை பெய்து வரும் நிலையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள்,தீயணைப்பு வீரர்கள் தயாராக உள்ளன. கடலூர் மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கனமழையால் இடிந்து விழுந்த வீடு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே, தொடர்மழையால் 150 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.
நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற முத்துப்பேட்டை தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: வெறிச்சோடிய வீதிகள்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு 8.30 மணிக்கு பெங்கல் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையில் இருந்து 370 கி.மீ., தொலைவில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் காரணமாக நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நாகூரில் பெய்து வரும் கனமழையால் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
3 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று இரவு புயலாக உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு 8.30 மணிக்கு பெங்கல் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. பெங்கல் புயலாக மாறியபின் நாளை தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 370 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 470 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் உருவாக உள்ள‘பெங்கல் புயல்’ சென்னையை நெருங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெங்கல் புயல் சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
புயல் கரையை கடக்கும்போது பலத்த தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வங்கக் கடலில் உருவாக உள்ள பெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி பெங்கல் புயல் உருவான பிறகு வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.