சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான 'ரெட் அலர்ட்' வாபஸ் - வானிலை மையம்
சென்னையில் ஓரிரு இடங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் விலக்கப்பட்டது
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்' எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றுள்ளது. மேலும் இந்த மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக உள்ளது. 542 இடங்களில் நீர் தேங்கிய நிலையில் 501 இடங்களில் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 6,963 அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
பாடியநல்லூர் அடுத்த மகாமேரு நகர் பகுதியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இடுப்பளவு நீரில் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருவதாகவும் தங்கள் பகுதியை மந்திரிகளோ, அதிகாரிகளோ யாரும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன்? - பாலச்சந்திரன் விளக்கம்
சென்னையில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால்தான் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலெர்ட் என்றால் எல்லா இடங்களிலும் 20 செ.மீ அளவுக்கு மேல் கனமழை பெய்யும் என்று அர்த்தம் இல்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலு இழக்கவில்லை. எனவே கரையைக் கடக்கும் போது ஓரிரு இடங்களில் கனமழை இருக்கலாம். ஏற்கெனவே பெய்த மழையின் அளவு, காற்றின் வேகத்தை பொறுத்தே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று பாலச்சந்திரன் கூறினார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற பல கட்டங்கள் உள்ளன. புயலாக மாறுமா என்பதை இப்போது கணிக்க முடியாது என்று பாலச்சந்திரன் கூறினார்.
வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம்
வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 13.8 செ.மீ. இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 7.1 செ.மீ. இது இயல்பை விட 94% அதிகம்தான்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும். இன்னும் கரையைக் கடக்காததால் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மணடல் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் புதுச்சேரி - நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே நாளை அதிகாலை கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் கார்கள்,பஸ் ஊர்ந்து சென்ற காட்சி...
சென்னையில் மழை காரணமாக நேற்று சில வழித்தடங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், இன்று அனைத்துபஸ்களும் வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஓரிரு இடங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.