தமிழ்நாட்டின் குரல் ஓங்கி ஒலிக்கும்!
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், மொத்தம் உள்ள 39 உறுப்பினர்களும் தி.மு.க கூட்டணியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.;
நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான இறுதி கூட்டம் குளிர்கால கூட்டத்தொடராக கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. டிசம்பர் மாதம் 20-ந்தேதி வரை நடக்க இருக்கும் இந்தக் கூட்டத்தொடரில் 16 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. எனவே, விவாதங்களின்போது அவையில் அனல் பறக்கும்.
சமீபத்தில் நடந்து முடிந்த மராட்டியம், ஜார்கண்ட் மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள், அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா போன்ற பல விவகாரங்கள் அவையில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே, முதல் நாள் கூட்டத்தில் அதானி மற்றும் மணிப்பூர் கலவர விவகாரங்கள் எழுப்பப்பட்டு கடும் அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, பிரதமர் நரேந்திரமோடி செய்தியாளர்களிடம் பேசும்போது, "மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு சில உறுப்பினர்க ளைக் கொண்டு அராஜக முறையில் அவை நடவடிக்கை களை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டி ருக்கிறார்கள். நாட்டு மக்கள் அவர்கள் செயல்களை யெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சமயம் வரும் போது அவர்களை மக்கள் தண்டிக்கிறார்கள்" என்று மராட்டிய தேர்தல் முடிவுகளை மனதில் வைத்து கடுமையாக சாடினார்.
மேலும், "நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கவேண்டும். அதிக அளவில் உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்துகொள்ளவேண்டும். துரதிர்ஷ்டவசமாக சில உறுப்பினர்கள் தங்கள் அரசியல் லாபத்துக்காக அமளியை ஏற்படுத்தி அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடைஞ்சல் ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்" என்றும் அவர் பேசினார்.
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், மொத்தம் உள்ள 39 உறுப்பினர்களும் தி.மு.க கூட்டணியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மாநிலங்களவையிலும் 'இந்தியா' கூட்டணிக்கு 12 உறுப்பினர்கள், அதாவது தி.மு.க.வுக்கு 10, காங்கிரசுக் கும், ம.தி.மு.க.வுக்கும் தலா ஒரு உறுப்பினர்கள் என இருக்கிறார்கள். அ.தி.மு.கவுக்கு 4 உறுப்பினர்களும், பா.ம.கவுக்கு ஒரு உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சிக்கு ஒரு உறுப்பினரும் இருக்கிறார்கள். குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில உரிமை, நிதி உரிமையை காக்க நாடாளுமன்றத்தில் முழங்குவோம் என்ற தீர்மானத்திற்கேற்ப அந்த குரலை நாடாளுமன்ற உறுப்பினர் கள் எழுப்ப வேண்டும், மென்மையாக பேசக்கூடாது, கடுமையாக பேசவேண்டும்" என்று கட்டளையிட்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுக்கேற்ப இந்தக் கூட்டத்தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் நாள்தோறும் தங்கள் விவாதத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளுக்காக புயலை கிளப்புவார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு, 'நீட்' பிரச்சினை, மீனவர் பிரச்சினை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம், புதிய கல்வி திட்டத்தின் அடிப்படையில் 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு வர வேண்டிய நிலுவைத்தொகை, ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்துவதால் ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு இழப்பீடு, ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெறுதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த பெரிய நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்குதல், அதுவரையில் படித்து முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி, ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம், மணிப்பூர் பிரச்சினை போன்ற 11 பிரச்சினைகளை முன்னிறுத்தி தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் காரசாரமாக விவாதிக்க இருக்கிறார்கள். இதைத்தான் தமிழ்நாடும் எதிர்பார்க்கிறது.