எவ்வளவு நேரம் வேலை பார்க்கலாம்?
உடல் உழைப்பு அதிகமாக தேவைப்படும் தொழிலாளர்களால் அதிகநேரம் வேலை பார்க்க முடியாது.;
அரசு ஊழியர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் வாரத்துக்கு எவ்வளவு மணி நேரம் வேலை பார்க்கலாம்? என்பது குறித்து இப்போது பெரிய விவாதமே நடந்து வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 13-ந்தேதி திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் கொண்டாடப்பட்டது. இதில் செவ்வாய்க்கிழமை பொங்கலும், புதன்கிழமை மாட்டுப்பொங்கலும், வியாழக்கிழமை காணும் பொங்கலும் தமிழர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு இந்த 3 நாட்களும்தான் முதலில் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை விட்டால், அடுத்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வாரவிடுமுறையுடன் சேர்த்து 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துவிடும் என்று அரசு ஊழியர்கள் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவித்ததால் அரசு ஊழியர்கள் 6 நாட்கள் விடுமுறையில் மகிழ்ச்சியோடு பொங்கலை கொண்டாடினார்கள்.
வெள்ளிக்கிழமை விடுமுறையை கடந்தவாரம் 25-ந்தேதி சனிக்கிழமை வேலைபார்த்து ஈடுசெய்யவேண்டும் என்றும் அரசு அறிவித்து இருந்தது. பொதுமக்கள் மத்தியில், ஏறத்தாழ ஒருவார காலத்துக்கு அரசு அலுவலகங்கள் இயங்காது என்பதால் சேவைகள் கிடைப்பதிலும், கோரிக்கைகள் நிறைவேறுவதிலும் எந்த பணிகளும் நடக்காதே, அரசு நிர்வாகமெல்லாம் முடங்கிப்போய்விடுமே என்ற குறை இருந்தது. இந்த 6 நாட்கள் விடுமுறை அரசு ஊழியர்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது, அவர்கள் தங்கள் குடும்பத்தோடு வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று மகிழ முடிந்தது, சொந்த ஊர்களுக்கு சென்று பெற்றோர், உற்றார், உறவினரோடு செலவழித்து உறவுகளை வலுப்படுத்த முடிந்தது என்பதால் இந்த விடுமுறை வரவேற்புக்குரியதே.
இப்படி விடுமுறையை கொண்டாடி மகிழும் நேரத்தில் 'எல் அண்டு டி' நிறுவனத்தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம், ''சீனாவில் தொழிலாளர்கள் வாரத்துக்கு 90 மணிநேரம் வேலை பார்க்கிறார்கள், அமெரிக்காவில் 50 மணி நேரம்தான் வேலை பார்க்கிறார்கள். நாம் உலகில் சிகரத்தில் இருக்கவேண்டுமென்றால், வாரத்துக்கு 90 மணி நேரம் வேலைபார்க்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்க வரவேண்டும். எவ்வளவு நேரம்தான் வீட்டில் மனைவி அல்லது கணவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பீர்கள்'' என்று கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'இன்போசிஸ்' நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி, ''வாரத்துக்கு அதிகபட்சமாக 60 மணி நேரம் வேலை பார்க்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கி, 70 மணிநேரம் வேலைபார்க்கலாம் என்று கொண்டுவரவேண்டும்'' என்று கூறிய பேச்சால் எழுந்த சலசலப்பு அடங்குவதற்கு முன்பு தற்போது, எல் அண்டு டி நிறுவன தலைவரின் கருத்து பரபரப்பை கிளப்பியிருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு தொழில்களுக்கும், வித்தியாசமான வேலைநேரம் தேவைப்படுகிறது. உடல் உழைப்பு அதிகமாக தேவைப்படும் தொழிலாளர்களால் அதிகநேரம் வேலை பார்க்க முடியாது.
சுப்பிரமணியம் கூறிய கருத்துப்படி, கூடுதல் நேரம் உழைக்கக்கூடிய பணிகளில் வேலை பார்ப்பவர்களுக்கும் பணப்பலன் கிடைத்து, வேலை வழங்குபவர்களுக்கும் பலன் அளிக்கும்பட்சத்தில் உற்பத்தித்திறன் உயர்ந்தால், பணியாளர்கள் கூடுதல் நேரம் வேலைபார்ப்பதில் தவறில்லை. ஆனால் இருசாராருக்கும் ஒத்தக்கருத்து ஏற்பட்டு இருசாராருக்குமே அதனால் பலன் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் வார விடுமுறையன்று வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு 'விசேஷ அலவன்சு' வழங்கப்பட்ட நேரத்தில் தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை பெருக்கிக்கொள்ள மகிழ்ச்சியோடு முன்வந்து வேலை பார்த்தார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.