நடுத்தர மக்களை மகிழ்விக்கும் 'பட்ஜெட்'

Update:2025-02-03 07:45 IST

பிரதமர் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் முழுமையான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டுக்கு பல சிறப்புகள் உண்டு. தமிழ்நாட்டை சேர்ந்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்த 8-வது பட்ஜெட். இது பெரிய சாதனை. இதுவரை எந்த நிதி மந்திரியும் தொடர்ச்சியாக 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்ததில்லை. பட்ஜெட்டுக்கு முந்தைய தினம் நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரையிலும், பிரதமர் மோடி பத்திரிகையாளர்களிடம் கூறியபோதும் பட்ஜெட் எப்படி இருக்கும்?, யாரை மகிழ்விக்கும்? என்பதை கோடிட்டுக் காட்டிவிட்டார்கள்.

ஜனாதிபதி உரையாற்றும்போது, 'இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் என்பது நடுத்தர மக்களின் விருப்பத்திலும், அதை நிறைவேற்றுவதிலும்தான் இருக்கிறது. நடுத்தர மக்களின் பெரிய கனவுகள் எவ்வளவு பெரியதோ, அந்த அளவுக்கு நாட்டை உயரச்செய்யும்' என்று கூறினார். பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசும்போது, 'நான் செல்வத்தை வழங்கும் மகாலட்சுமியிடம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வெற்றி, செழிப்பு, நல்வாழ்வை வழங்கவேண்டும், அவர்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்' என கூறினார்.

பட்ஜெட்டில் நடுத்தர மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான வருமான வரி சலுகை நிறைவேறிவிட்டது. பா.ஜனதா ஆட்சி பொறுப்பை ஏற்ற நேரத்தில் அதாவது 2014-ம் ஆண்டில் ரூ.2.5 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்று இருந்தது. இந்த வரம்பு 2019-ல் ரூ.5 லட்சமாகவும், 2023-ல் ரூ.7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு இருந்தது. இந்த பட்ஜெட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய வரிவிதிப்பு திட்டத்தில் ரூ.12 லட்சமாக உயர்த்தப்படும் என்ற நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு நடுத்தர மக்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த வரிச்சலுகையால் ரூ.12 லட்சம் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் இனி ரூ.80 ஆயிரம் வரை மிச்சம் பிடிக்கமுடியும். மாதத்திற்கு இனி ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் வருமானவரி செலுத்த தேவையில்லை. அதேவேளையில் ரூ.12 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கும் பலன் அளிக்கும். வீட்டு உரிமையாளர்களுக்கு தங்களது வாடகை வருமானத்தில் கிடைத்த வரி சலுகை ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால் நேரடி வரிகளில் ரூ.1 லட்சம் கோடியும், மறைமுக வரிகளில் ரூ.2,600 கோடியும் அரசுக்கு இழப்பு ஏற்படும். ஆக இந்த தொகை மக்களின் கையிருப்பில் இருந்து புதிய முதலீடுகள், பொருட்கள் வாங்கும் செலவினங்கள், சேமிப்புகளை மேற்கொள்ள வழிவகுக்கும்.

இதுபோல மூத்தகுடிமக்களின் சேமிப்புகளுக்கும் வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் 36 மருந்துகளுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை நோயால் வாடுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது. லித்தியம் பேட்டரிக்கு இறக்குமதி வரி ரத்து என்ற நல்ல அறிவிப்பால் மின்சார வாகனங்களின் விலையும் குறையும். விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி எல்லா தரப்புகளையும் மறந்துவிடாத பட்ஜெட் இது. மொத்தத்தில் பிரதமர் மோடி லட்சுமியிடம் விடுத்த பிரார்த்தனை நிறைவேறிவிட்டது. ஆனால், வருமானவரி விலக்கு மகிழ்ச்சி அளிக்கப்பட்டாலும், ஜி.எஸ்.டி. வரியின் வலி இன்னும் குறையாமல் இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்