அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்வா?

உற்பத்தி செலவு அதிகமாகிவிட்டால், மத்திய அரசாங்கம் மானியம் கொடுத்து இந்த விலை உயர்வை குறைக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.;

Update:2024-11-30 05:56 IST

எல்லோருமே ஆரோக்கியமாக இருக்க விரும்பினாலும், சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டு விடுகின்றன. மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவது அரசின் கடமை என்றாலும், எல்லா நேரங்களிலும் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லமுடியாது. எல்லா மருந்துகளும் அங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டை தனியார் மருந்துக் கடைகளில் பணம் கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

சில நோய்களுக்கான மருந்துகளை நீண்ட காலத்துக்கும், சில ஊசிகளை தினமும் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கும். இந்த மருந்துகளின் விலையெல்லாம் குறைவாக இருந்தால்தான் ஏழை-எளிய, நடுத்தர மக்களால் வாங்க முடியும். ஆனால், சில நாட்களுக்கு முன்பு மக்கள் சாதாரணமாக பயன்படுத்தும் 8 மருந்துகளின் விலையை தேசிய மருந்து பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் ஆணையம் உயர்த்தியுள்ளது.

இந்த மருந்துகள் ஆஸ்துமா, காசநோய், மனநல கோளாறு, குளுக்கோமா போன்ற சில நோய்களுக்கான மருந்துகளாகும். இதன் விலையை ஏதோ கொஞ்சம் நஞ்சம் உயர்த்தவில்லை. இப்போது இருக்கும் விலையைவிட 50 சதவீதம் அதிகமாக உயர்த்திக்கொள்ள மத்திய அரசாங்கம் அனுமதியளித்து ஆணை பிறப்பித்துள்ளது. அசாதாரண சூழ்நிலையிலும், பொதுநலன் கருதியும் இந்த விலை உயர்வுக்கு அனுமதியளித்து இருப்பதாக கூறுவதுதான் வியப்பாக இருக்கிறது. இந்த விலை உயர்வை அறிவித்து இருக்கும் தேசிய மருந்து விலை ஆணையம் என்பது மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் கீழ் செயல்படும் மருந்துப்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மருந்து உற்பத்தியாளர்கள் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரித்தல் அந்நிய செலாவணி ரேட் மாற்றம் போன்ற காரணங்களால் விலை உயர்த்த அனுமதி தருமாறு விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

இதய நோய்களுக்காகவும், இதய துடிப்பு குறைந்த நிலையிலும் மற்றும் அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்திலும் போடும் ஊசி மருந்தான அட்ரோபின், காசநோய்க்கு பயன்படுத்தும் ஸ்டெரெப்டொமைசின் ஊசி மருந்துக்கான பவுடர், சல்புட்டமால் என்ற ஆஸ்துமாவுக்கான மாத்திரை மற்றும் மூச்சு தொந்தரவுக்கான மருந்து, பைலோகார்பின் என்ற குளுக்கோமா கண் நோய்க்கான மருந்து, செபாடிராக்சில் என்ற ஆண்டிபயாடிக்ஸ் மாத்திரை, டெஸ்பெரியாக்சமின் என்ற ரத்தசோகைக்கான ஊசி மருந்து, லித்தியம் மாத்திரை போன்ற சாதாரணமாக தேவைப்படும் மருந்துகள், ஊசி மருந்துகளின் விலையை 50 சதவீதம் உயர்த்தியிருப்பது. இந்த மாத்திரை, ஊசி மருந்துகளை தேவைப்படும் மக்களுக்கு தாங்க முடியாத செலவாக இருக்கும்.

உற்பத்தி செலவு அதிகமாகிவிட்டால், மத்திய அரசாங்கம் மானியம் கொடுத்து இந்த விலை உயர்வை குறைக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், இந்த விலை உயர்வு லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை மருந்துகளுக்கான விலை உயர்வு என்பதால் அவர்களை பாதிக்கும். இதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு சுயேச்சையான ஆய்வு கமிட்டி அமைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே, பிரதமர் இதில் நேரடியாக தலையிட்டு, இந்த மருந்துகளை பயன்படுத்தும் மக்களும், தயாரிக்கும் உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படாத அளவில் ஒரு நல்ல வழியைக்கண்டு விலை உயர்வை குறைக்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்