தஞ்சையில் ரம்ஜான் பண்டிகை விடுமுறை, வேலை நாளாக அறிவிப்பா? - தமிழக அரசு விளக்கம்
தஞ்சையில் ரம்ஜான் பண்டிகை விடுமுறை, வேலை நாளாக அறிவிப்பா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.;

சென்னை,
தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை விடுமுறையை வேலை நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. பலரும் இதை வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். மாசிமக திருவிழாவை முன்னிட்டு கடந்த 12-ந்தேதியன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
29-ந்தேதியன்று ரம்ஜான் பண்டிகை இல்லை. வருகிற 31-ந்தேதியன்று (திங்கட்கிழமை) தான் ரம்ஜான் விடுமுறை என தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பிறை பார்க்கப்பட்டு தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பின் அடிப்படையில் ரம்ஜான் தேதியில் மாற்றங்கள் இருக்கலாம்." என்று கூறப்பட்டுள்ளது.