டங்ஸ்டன் போராட்டம்: வழக்குகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை - மு.க.ஸ்டாலின்
டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;
சென்னை,
மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு அரிட்டாபட்டி உள்ளிட்ட மேலூர் பகுதியிலுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் விவசாயிகள், மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் இந்த திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள், கிராம மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், மேலூர் பகுதியிலுள்ள முல்லைப்பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம், மேலூர் தொகுதி அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பு, டங்ஸ்டன் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி மேலூர் நரசிங்கம்பட்டி பெருமாள் கோவில் பகுதியில் இருந்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள மத்திய தபால் நிலையத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக நடைபயணம் நடத்தியதாக சுமார் 2 ஆயிரம் பெண்கள், 3 ஆயிரம் ஆண்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேர் மீது தல்லாகுளம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில உரிமை பறிபோகும் என்று தெரிந்தும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ஆதரித்தவர் உங்கள் (அதிமுக) மாநிலங்களவை உறுப்பினர்தான். டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாக பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.