இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025

Update:2025-01-09 08:15 IST
Live Updates - Page 2
2025-01-09 09:14 GMT

சட்டசபையை பார்க்கும் போது வடிவேலுவின் 23-ம் புலிகேசி படத்தில் உள்ளது போல் முதல்-அமைச்சரை புகழ்வது தெரிகிறது. வடிவேலுவின் இடத்தை செல்லப்பெருந்தகை பிடித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

2025-01-09 09:10 GMT

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்களை அம்மாநில உள்துறை மந்திரி அனிதா சந்தித்து ஆறுதல் கூறினார். 

2025-01-09 08:21 GMT

பெரியார் குறித்த கருத்து - சீமான் மீது தி.மு.க புகார்

பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சட்டத்துறை துணை செயலாளர் புகார் மனு அளித்துள்ளார். சீமான் பேசியது தொடர்பான வீடியோ ஆதாரங்களோடு தி.மு.கவினர் புகார் அளித்துள்ளனர்.

2025-01-09 07:03 GMT

யு.ஜி.சி.க்கு எதிரான முதல்-அமைச்சரின் தனித்தீர்மானத்திற்கு அ.தி.முக. ஆதரவு

தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், யு.ஜி.சி.க்கு எதிராக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். முதல்-அமைச்சரின் இந்த தனித்தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியான அ.தி.முக. ஆதரவு தெரிவித்து உள்ளது.

இந்த விதிகளை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

2025-01-09 06:47 GMT

யு.ஜி.சி. கொண்டு வந்த புதிய விதிகளுக்கு எதிராக சட்டசபையில் தனித் தீர்மானம்

நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்த புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

2025-01-09 06:45 GMT

எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா? - முதல்-அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா? என்று முதல்-அமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

2025-01-09 06:43 GMT

தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் விழாவில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆட்சிக்கு வந்தது முதல் இந்த வளர்ச்சியே போதும் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. தமிழ்நாட்டுக்கு இன்னும் வளர்ச்சி வேண்டும் என்று இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நகரத்தில் மட்டும் வளர்ச்சி குவியக்கூடாது; அனைத்து பகுதிகளும் சமச்சீராக வளர வேண்டும்" என்று கூறினார்.

2025-01-09 06:38 GMT

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை கூடுகிறது

தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளிவந்து உள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மாவட்ட செயலாளர்கள் பனையூர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

த.வெ.க மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்கள் நாளை இறுதி செய்யப்பட உள்ளனர். இதற்காக வாக்கெடுப்பு முறை நடைபெறும். அதன் அடிப்படையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

2025-01-09 06:21 GMT

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இன்றே வழங்கிட முதலமைச்சர் உத்தரவு

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயினை முன்கூட்டியே வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.1.2025) உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம் பயன்பெறும் 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணிகள் இன்று காலை முதலே தொடங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இன்று அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1000/- வரவு வைக்கப்படுகிறது.

2025-01-09 05:58 GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான காங்கிரசை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்