போஸ்பரா பகுதி மக்களின் விவசாய நிலங்களை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் - சீமான்
நீலகிரி மாவட்டம் போஸ்பரா பகுதி மக்களின் விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட போஸ்பரா பகுதியில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 73.5 ஏக்கர் நிலத்தைக் காப்புக்காடுகளாக வரையறை செய்து வனமாக மாற்றும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசின் வனத்துறை ஈடுபட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் கடந்த 1969 ஆம் ஆண்டுக் கைப்பற்றப்பட்ட நிலங்களுக்குப் பட்டா கிடைக்கத் தகுதியானவர்களாக இருந்த போதிலும், அன்றைய ஆட்சியாளர்கள் மக்களுக்குப் பட்டா வழங்க முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து 1978வது ஆண்டில் அந்தப் பகுதியை நேரடியாக ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளும் பட்டா பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்றும் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என்றும் உறுதியளித்தது. ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றாமல் இருந்துவிட்டு, தற்போது மக்களை வன ஆக்கிரமிப்பாளர்களாக கட்டமைக்க முயல்வது எவ்வகையில் நியாயமாகும்?
வனத்தைச் சார்ந்து வாழக்கூடிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசால் கடந்த 2006 ஆம் ஆண்டு வன உரிமை அங்கீகார சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் வன உரிமை அங்கீகார சட்டம் அமல்படுத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் முதுமலை புலிகள் காப்பக திட்டம் கொண்டுவரப்படுகிறது. வன வளமும் வனவிலங்குகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக விளைநிலங்களையும், வாழ்விடங்களையும் விட்டு மக்களை விரட்டுவதென்பது மிகப்பெரும் கொடுமையாகும். அத்தகைய கொடுஞ் செயல்பாடுகளில் ஒன்றாகவே போஸ்பரா பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் மீது தமிழ்நாடு வனத்துறை நடத்தும் எதேச்சதிகார நடவடிக்கையுமாகும்.
ஆகவே, 1969 ஆம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையிலும், 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அளித்த உறுதிமொழியின் அடிப்படையிலும், 2006 உரிமை அங்கீகார சட்டத்தின் அடிப்படையிலும் பல ஆண்டுகளாக வேளாண்மை செய்து வாழ்ந்து வரும் நீலகிரி மாவட்டம் போஸ்பரா பகுதி விவசாய மக்களின் நிலங்களையும் குடியிருப்புகளையும் வனமாக மாற்றும் நடவடிக்கையினைக் கைவிடுவதோடு, அந்நிலப்பரப்பை முழுவதுமாக ஆய்வு செய்து அம்மக்களின் அடிப்படை உரிமையான நில பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.