டங்ஸ்டன் சுரங்க ஏலம் : மறு ஆய்வுக்கு பரிந்துரைத்த மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி

மத்திய அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்

Update: 2024-12-24 16:21 GMT

புதுடெல்லி,

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் கடந்த 9-ந்தேதி தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் , டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. பல்லுயிர் பகுதிகளை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது .

இந்த நிலையில், மத்திய அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கையைப் பரிசீலித்து, சுரங்க ஏலத்தை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய சுரங்கத் துறை மந்திரி கிஷன் ரெட்டி அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாகவும், மதுரை மாவட்ட சகோதர, சகோதரிகள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய சுரங்கத் துறை மந்திரி கிஷன் ரெட்டி அவர்கள், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முடிவெடுப்பதற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விளக்கமளித்ததோடு, அந்தப் பகுதிகளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், சுரங்க ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனத்துக்கு, உரிமம் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கும் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அவர்கள், எப்போதும் தமிழக மக்கள் மற்றும் நமது விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியே முடிவுகள் மேற்கொள்வார் என்பது, இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்