'தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இந்தியை கற்பதில் எந்த சங்கடமும் இல்லை' - திருமாவளவன்
தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இந்தியை கற்பதில் யாருக்கும் எந்த சங்கடமும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை அண்ணாசாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தியை திணிப்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. அவரவர் தாய்மொழியை கற்பதில் எந்த சிக்கலும் இல்லை, ஆனால் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. அரசு புதிதாக கையாளும் அணுகுமுறையாக இருக்கிறது. அதை சட்டப்பூர்வமாக நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள்.
அவரவர் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இந்தியை கற்பதில் யாருக்கும் எந்த சங்கடமும் இல்லை. அப்படி படிக்க கூடாது என்று தமிழ்நாட்டில் எந்த கட்சியும் கட்டளையிடவில்லை. ஆனால் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சட்டப்பூர்வமாக இந்தியை அனைவரும் கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஏற்புடையது அல்ல."
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.