வறுமை ஒழிப்பில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் - அரசு பெருமிதம்

தமிழகத்தில் கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.;

Update: 2025-01-03 09:23 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நெல், அரிசி உட்பட அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு நிலவரங்களை எப்போதும் சீராக நிர்வகித்திட உதவும் வகையில் வெளிச் சந்தை வர்த்தகம் உட்பட அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1956ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின்படி 23.2.1972 அன்று நிறுவப்பட்டது.

தமிழ்நாட்டு மக்களுக்குக் குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கியது உட்படப் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களால் தமிழ்நாட்டிலிருந்து வறுமை முற்றிலும் அகற்றப்பட்டு மக்கள் பசிப்பிணி ஒழிந்து வளமான வாழ்வில் மகிழ்ச்சி கொண்டுள்ளனர். மத்திய அரசின் ஆய்வு அறிக்கைகள் வாயிலாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது.

புதிய நியாயவிலைக் கடைகள்:-

ஏழை எளிய பொதுமக்களின் வசதிக்காக அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 633 முழுநேர நியாய விலைக் கடைகளும், 1,033 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 1,666 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. 31.12.2023 வரை நியாய விலைக் கடைகளின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழலை மேம்படுத்துவதற்கான பணிகள் 2,778 நியாய விலைக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

புயல் பாதித்தபோது திராவிட மாடல் அரசு வழங்கிய நிவாரணம்

கடந்த 2023 ஆம் ஆண்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜம் புயலினால் ஏற்பட்ட கனமழையினால், சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6,000/- வீதம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தபடி 23 லட்சத்து 18 ஆயிரத்து 200 குடும்பங்களுக்கு ரூ.1,390.92 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கட்டடங்கள்:-

திராவிட மாடல் அரசு விவசாயிகளின் நலன் கருதி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குப் படிப்படியாகக் கட்டடங்களைக் கட்டி வருகிறது. 40 மாதங்களில் 230 நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு, இதுவரை 130 நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எஞ்சியவற்றின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

தமிழ்நாட்டிற்கு முதல் பரிசு:-

புதுடெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புப் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு மத்திய அரசு முதல் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது. இப்படி ஒவ்வொரு துறையிலும் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதற்காகப் புதிய பல திட்டங்கள் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திச் சாதனைகள் நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத் தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்