உணவுக்காக மக்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல் - திமுக அரசுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பெஞ்சல் புயல் கரையை கடந்து மூன்று தினங்கள் ஆன பின்பும் அதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட மக்கள் தவித்து வருவதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன.
குடியிருப்புகள் முழுவதையும் மழைநீர் சூழ்ந்த நிலையில் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, தங்குவதற்கு இடமின்றி தவித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்துத் தராமல் அவர்களை வீதிக்கு வந்து போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
அதிலும், எந்தவித முன்னறிவிப்புமின்றி சாத்தனூர் அணையிலிருந்து பெருமளவு நீரை திறந்துவிட்டதே, விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு கிராம மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்க முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட வந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடாமல் பிரதான சாலைகளை மட்டுமே பார்வையிட்டுச் சென்றதாக கூறப்படும் நிலையில், உணவுக்காக கையேந்த வைத்த திமுக அரசின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடே அமைச்சர் பொன்முடி அவர்கள் மீது சேற்றை வீசும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
எனவே, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதோடு, இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிடுமாறும் முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.