திருவண்ணாமலையில் வீடுகளின் மீது விழுந்த பாறை- 7 பேர் நிலை என்ன?

திருவண்ணாமலையில் கனமழை பெய்து வரும் நிலையில், இரண்டு வீடுகள் மீது பாறை மற்றும் மண் சரிந்துள்ளது.

Update: 2024-12-01 18:05 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் பெஞ்ஜல் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழையினால் மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது. அப்போது மண் சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் சரிந்தது.

இதில் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது. அந்த வீட்டில் கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள் 2 பேர் மற்றும் கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் இருந்ததாகவும், மண் சரிவினால் 7 பேரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவே சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

 கலெக்டர் இது தொடர்பாக கூறுகையில், மலையில் இருந்து உருண்டு வந்த பாறையினால் மண் சரிவு ஏற்பட்டு ஒரு வீடு முற்றிலுமாக மூடப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் மேல் நின்று கொண்டிருக்கும் பாறையானது எந்த நேரத்திலும் உருண்டு வரும் அபாயம் உள்ளது. வீட்டில் 2 ஆண், ஒரு பெண் மற்றும் 5 குழந்தைகள் இருந்ததாக அருகே உள்ளவர்கள் தெரிவித்தனர். அவர்கள் உள்ளே சிக்கி உள்ளவர்களா?, அல்லது சம்பவத்தின்போது வெளியே சென்று இருந்தார்களா? என்பது குறித்த விவரம் தெரிய வில்லை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்