விழுப்புரம் மாவட்டத்தை இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்கிறார்.;

Update:2024-12-02 07:20 IST

கோப்புப்படம்

விழுப்புரம்,

நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய 'பெஞ்சல்' புயல், இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், புதுச்சேரிக்கு அருகே நேற்று முன்தினம் இரவில் இருந்து 'பெஞ்சல்' புயல் நகராமல் அப்படியே நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேல் 'பெஞ்ச்ல்' புயல் நிலப்பகுதியில் கரையேறியும் வலு குறையாமல் புதுச்சேரியில் நகராமல் நின்று புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் மழையை கொட்டித் தீர்த்துவிட்டது. அந்த பகுதிகளில் எல்லாம் இதுவரை இல்லாத மழைப்பதிவாக அது பதிவாகி வெள்ளக்காடாக்கி விட்டது.

அதன்பின்னர், நேற்று காலை 11.30 மணிக்கு பிறகு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின்னர் இரவுக்குள் தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

பெஞ்ஜல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

மேலும் நேற்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதோடு மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்கிறார்.

இதையொட்டி காலை 8.30 மணியளவில் மரக்காணம் ஒன்றியம் மந்தவாய்புதுக்குப்பத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும் அவர் தொடர்ந்து விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்படும் அவர் விழுப்புரம் ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வி.பி.எஸ். மெட்ரிக் பள்ளியில் (தாமரைக்குளம்) அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்