சென்னைக்கு வரும் ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி
தமிழகத்தின் பல இடங்களில் இருந்து சென்னை வரும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதற்கிடையே, முண்டியம்பாக்கம் அருகே ரெயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அவ்வழியாக இயக்கப்படும் ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று காலை புறப்பட வேண்டிய ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டன.
அதேபோல, தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல இடங்களில் இருந்து சென்னை வரும் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, கொல்லம், நாகர்கோவில் விரைவு ரெயில்கள் விழுப்புரத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால் நீண்ட நேரம் விழுப்புரம் ரெயில் நிலையத்திலேயே காத்திருந்த பயணிகள், பஸ்கள் மூலம் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.
மேலும், பாண்டியன் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி, ராமேஸ்வரம், செங்கோட்டை, திருச்செந்தூர் விரைவு ரெயில்கள் மிகவும் தாமதமாக சென்னை வந்துகொண்டிருக்கின்றன. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சென்னைக்கு வர முடியாமல் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.