நிவாரண பணிகள்: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

Update: 2024-12-02 05:40 GMT

கோப்புப்படம்

சென்னை,

வங்கக்கடலில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, 'பெஞ்சல்' என்ற பெயருடன் வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்தது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய 'பெஞ்சல்' புயல், இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், புதுச்சேரிக்கு அருகே நேற்று முன்தினம் இரவில் இருந்து 'பெஞ்சல்' புயல் நகராமல் அப்படியே நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேல் 'பெஞ்சல்' புயல் நிலப்பகுதியில் கரையேறியும் வலு குறையாமல் புதுச்சேரியில் நகராமல் நின்று புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் மழையை கொட்டித் தீர்த்தது. அதன்பின்னர், நேற்று காலை 11.30 மணிக்கு பிறகு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின்னர் இரவுக்குள் தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்த சூழலில் அதி கனமழை பாதிப்புக்குள்ளான கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள் குறித்து கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தியாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி மற்றும் தருமபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோரை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்