சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு டாக்டர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விக்னேஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் டாக்டரை தாக்கிய விக்னேசுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் டாக்டர் தாக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் அமைக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு போலீஸ் பூத்திலும் 10 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் உள்ள 19 மருத்துவமனைகளில் ஏற்கனவே 9 மருத்துவமனைகளில் காவல் நிலையம், பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத்துகள் விரைவில் அமைக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.