அமித்ஷா மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

Update: 2024-12-24 05:45 GMT

சிவகங்கை,

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அம்பேத்கர் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா கூறிய கருத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரின் பெயரை சொன்னால் மோட்சம் கிடைக்காது என்ற மனுஸ்மிருதியின் கருத்தை பிரதிபலிக்கிறார்கள் என்று வெளிப்படையாக தெரிகிறது. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். எப்படி செயல்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதில் திரித்துக்கூற காங்கிரசுக்கு அவசியம் இல்லை.

நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேசியது முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள டி.வி.யிலும் இது பதிவாகி உள்ளது. அதை பார்த்தாலே அவர் சொன்னது தெரியும். அவர் என்ன பேசினார் என்பது காங்கிரசுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே புரியும். இது காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை அல்ல. மனித உரிமை பிரச்சினை. எனவே மத்திய மந்திரி அமித்ஷா மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தும்.

தமிழக கவர்னர் வடகிழக்கு மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதால் அங்கிருந்து இங்கு அனுப்பப்பட்டார். அரசியல் சாசன கோட்டின் எல்லையை அவர் மீறிக்கொண்டே இருக்கிறார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு உள்ளது. அப்படி இருந்தும் அரசை கவர்னர் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதால் அரசுக்கும் கவர்னருக்கும் மோதல் போக்கு தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்