மதுரை: திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடி - 7 பேர் மீது வழக்குப்பதிவு

திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-12-17 03:04 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாயி என்பவர், தனது மகன் முருகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தரகர் மூலம் பெண் தேடியுள்ளார். அந்த வகையில் அறிமுகமான பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற தரகர், அடுத்தடுத்து இரண்டு பெண்களை திருமணத்திற்கு பேசி முடிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார். பின்னர் மீண்டும் அருணா தேவி என்ற பெண்ணை அழைத்து வந்து திருமணம் முடித்து வைப்பதாகக் கூறி, தரகர் கமிஷனாக 1 லட்சம் ரூபாய் வரை கேட்டுள்ளார்.

அப்போது சுதாரித்துக் கொண்ட பெருமாயி, தரகர் விஜயா மீது உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட விஜயா, கோவில்பட்டியை சேர்ந்த காளீஸ்வரி, அருப்புக்கோட்டையை சேர்ந்த அருணா தேவி  பொள்ளாச்சி மற்றும் திருப்பூரை சேர்ந்த சீனிவாசன், ஜெயபாரதி, சுஜித்ரா மற்றும் முரளிதரன் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விஜயா, காளீஸ்வரி மற்றும் அருணா தேவி ஆகிய 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்ய பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருமணம் முடிந்த கையோடு இவர்கள் பணம், நகையை கொள்ளையடித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கும்பல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்