போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணம் பாடநூல் கழகத்தில் முதலீடா?அண்ணாமலை கேள்வி

போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணம் பாடநூல் கழகத்தில் முதலீடு செய்யப்பட்டதா? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-12-17 04:23 GMT

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் நேற்றைய பதிவில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், தி.மு.க. நிர்வாகியுமான ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தை பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜாபர் சாதிக்கின் நிறுவனம், தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருள்களை வழங்கி உள்ளது தெரியவந்துள்ளது.

ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022-2023-ம் ஆண்டு காலகட்டத்தில், தனது நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும், அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. இதே காலகட்டத்தில்தான், தமிழ்நாட்டு பாடநூல் கழகத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்துக்கான பொருட்களை வழங்கியது, ஜாபர் சாதிக்கின் நிறுவனம் ஆகும். குறிப்பிட்ட காலகட்டத்தில், தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டு பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்