குமரியில் கனமழை: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள்

குமரி மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-10-25 18:08 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், குமரி மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காட்டாறுகளில் வெல்ல பெருக்கு ஏற்பட்டு அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மேலும் மழை காரணமாக தாமிரபரணி ஆறும் கரைபுரண்டு ஓடுகிறது. ஆகவே ஆற்றின் அருகே வசிக்கும் மக்கள் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட நிர்வாகம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எத்தகைய சூழலையும் எதிர் கொள்ள தீயணைப்பு, மின்சாரம், காவல் துறை மற்றும் அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. பொது மக்களின் எந்த தேவைக்கும் அவர்கள் உடனடியாக குரல் கொடுப்பார்கள் என தெரிவித்து கொள்கிறேன். எனினும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்