கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்தார்.;
சென்னை,
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த குழந்தை லியா லக்ஷ்மி (வயது 5) த/பெ.பழனிவேல் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் இன்று (03.01.2025) பிற்பகல் பள்ளியிலிருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை லியா லக்ஷ்மியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.