தீபாவளி பண்டிகை: வானதி சீனிவாசன் வாழ்த்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்;
சென்னை,
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் 100 கோடிக்கும் அதிகமான இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை தீபாவளி . புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என, தீபாவளி என்றாலே அனைவருக்கும் உற்சாகம்தான். அதுவும் குழந்தைகளுக்கு தீபாவளி தரும் உற்சாகத்தை யாராலும் தர முடியாது. எவ்வளவு தான் அதர்மம் தலைதூக்கினாலும், இறுதியில் தர்மமே வெல்லும், தீயசக்திகள் வெற்றிபெற்றது போல தோன்றினாலும் இறுதியில் நல்ல சக்திகள் வெல்லும் என்ற உயர்ந்த தத்துவம் தான் தீபாவளி, தீய சக்திகளின் அழிவையும், நல்லவர்களின் வெற்றியையும் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகளுடன் கொண்டாடி தீர்க்கிறோம்.
தீபாவளிக்காக நாம் வாங்கும் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் உள்ளிட்ட அனைத்துமே பலருக்கு வாழ்வளிக்கக் கூடியது. எனவே, அனைவரது வாழ்விலும் ஒளி வீச, பட்டாசுகள வெடித்து, நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஆதரவற்றவர்களுக்கு புத்தாடைகள் கொடுத்து தீபாவளி கொண்டாடுவோம். இந்த தீபாவளி நாளில் அனைவரது வாழ்விலும் வளம் கொழிக்க நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார் .