மயிலாடுதுறை அரசு மருத்துவமனை எதிரில் 26-ந்தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. சார்பில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை எதிரில் வருகிற 26-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2024-10-24 08:12 GMT

கோப்புப்படம் 

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்கள் பல்வேறு வகைகளில் பெருந்துன்பங்களை சந்தித்து வருவது தொடர்கதையாக உள்ளது. ஸ்டாலினின் தி.மு.க. அரசு மக்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தாமல் வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொண்டு, தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ ஊழியர்கள் இல்லை என்றும்; மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை இருப்பதாலும், நோயாளிகள் சிகிச்சைபெற முடியாமல் மிகுந்த அவதியுற்று வருவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகுந்த சிரமப்பட்டு வரும் நிலையில், நோயாளிகள் தங்கள் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று உரிய சிகிச்சை பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளதை, அறிக்கைகள் வாயிலாக அவ்வப்போது நான் எடுத்துக் கூறியும், மக்களின் உயிரைக் காப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இந்த அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. நோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்காமல் வேதனையில் ஆழ்த்தி வரும் ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு மிகச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் பாராட்டும் வகையில் மருத்துவத்துறை செயல்பட்டதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாலும்; மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள ஸ்டாலினின் தி.மு.க. அரசைக் கண்டித்தும்; வருகை தரும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில், வருகிற 26-ந்தேதி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில், மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் தி.மு.க. அரசைக் கண்டித்தும், ஏழை, எளிய மக்கள் நலனை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்