தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு - விஜய்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-25 05:43 GMT

சென்னை,

பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 25-ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், அதனை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.

இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதில் விஜய் கூறியுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்