"என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே.." - ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பேசிய எம்.ஜி.ஆர்
ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர் பேசினார்.
சென்னை,
அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் மனைவியும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
அப்போது விழாவில் 'ஏ.ஐ.' தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர்., மேடையில் வைக்கப்பட்டிருந்த திரையில் தோன்றி பேசியதாவது:-
என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா, சாப்பீட்டீர்களா? ரொம்ப நல்லது. நான் எப்போதும் உங்களுடன்தான் இருக்கிறேன். உங்கள் இதயத்தில்தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். எனது மனைவி ஜானகி நமது மாபெரும் இயக்கமான அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது.
என் மனைவியின் நூற்றாண்டு விழாவில் என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவருக்காக மாபெரும் விழா எடுத்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. முக்கியமாக எனது அன்பு தம்பி எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நேர்மையான பொது வாழ்வாலும், உழைப்பாலும், விசுவாசத்தாலும் இன்றைக்கு நம்முடைய கட்சியின் பொதுச்செயலாளராக சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கிறார் என்பதை நான் பார்க்கின்ற நேரத்தில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
நான் தொடங்கிய இந்த மாபெரும் இயக்கம் எந்தவொரு தேர்தல் வந்தாலும் அனைவரும் ஒருமித்த கருத்துக்களோடு உழைத்து தேர்தல் பணியாற்றி மாபெரும் வெற்றியை தேடி தருவீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். நாளை நமதே, இந்த நாடும் நமதே!"
இவ்வாறு அந்த குரல் பதிவு அமைந்தது.