புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்

Update:2024-11-29 09:56 IST
Live Updates - Page 4
2024-11-29 10:47 GMT

புயல் பெயர் உச்சரிப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறியிருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கில் 300 கிமீ தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ள இந்த புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு பெங்கல் புயல் (Cyclone Fengal) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை சவுதி அரேபியா சூட்டியுள்ளது. புயல் சின்னம் உருவானபோதே‘பெங்கல் புயல்’ என பரவலாக உச்சரிக்கப்பட்டது. ஆனால், சவுதி அரேபியாவில் இந்த வார்த்தையானது பெஞ்சல் (FENJAL) என உச்சரிக்கப்படும். எனவே, தற்போது புயலின் பெயரை பெஞ்சல் என உச்சரிக்கும்படி வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசிய, பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் (UNESCAP) பெயரிடும் மரபுகளின்படி, இந்த முறை வங்கக் கடலில் உருவான புயலுக்கான பெயரை சவுதி அரேபியா முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.

2024-11-29 10:13 GMT

வங்கக் கடலில் உருவானது புயல்

தென் மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக மாறியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2024-11-29 08:46 GMT

அதி கனமழை எச்சரிக்கை:

மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 முகாம்கள் தயாராக உள்ளன. புயல் உருவாகும் சூழலில் நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பேரிடர் மீட்புப்படையினர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்" என்றார்.

2024-11-29 08:22 GMT

5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்கக்கடலில் புயல் உருவாகும் சூழலில் 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகையில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு (ரெட் அலர்ட்) உள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை முதல் காரைக்கால் வரை இன்று மணிக்கு 70 கி.மீ வேகம் வரை தரைக்காற்றும் வீசக்கூடும் என்றும், நாளை வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

2024-11-29 07:44 GMT

இன்று மாலை முதல் அதிகனமழை - பிரதீப் ஜான்

வங்கக்கடலில் புயல் உருவாக இருக்கும் சூழலில் சென்னை மாநகரில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இன்று மாலை அல்லது இரவு முதல் அதிகனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாளை மறுநாள் வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. நேற்றிரவு சிறு மேக கூட்டமே 5 முதல் 6 செ.மீ அளவுக்கு மழை கொடுத்தது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

2024-11-29 07:21 GMT

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

2024-11-29 06:44 GMT

8 கி.மீ வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 380 கி.மீ தொலைவிலும் நாகையில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.

2024-11-29 06:10 GMT

உருவாகிறது புயல்

அடுத்த சில மணி நேரத்தில் வங்கக்கடலில் பெங்கல் புயல் உருவாகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது. சென்னையில் இருந்து 400 கி.மீ நாகையில் இருந்து 310 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

தற்போது 7 கி.மீ வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரியில் கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இரவு 7 மணி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2024-11-29 05:59 GMT

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முத்துப்பேட்டை அருகே 1000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்

2024-11-29 05:38 GMT

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்