புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
'பெஞ்சல்' புயல் கரையை கடக்கும் போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர் விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 60 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
எனவே அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களுடைய கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதாலோ அல்லது விழுவதாலோ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறும் தமிழக பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் விளம்பர போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பர போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*வங்கக் கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது
*சென்னையில் விட்டுவிட்டு தொடரும் மழை, நாளை முதல் தீவிரமடையும் என தகவல்
*சென்னையிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது
புயலின் நகரும் வேகம் குறைந்தது
பெஞ்சல் புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளது. அதன்படி, 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், அதன் வேகம் 12 கி.மீ ஆக குறைந்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் வங்கி சேவையில் நாளை எந்த பாதிப்பும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் வெங்கடாசலம் கூறியுள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை வழக்கம்போல் இயக்கப்படும்
சென்னையில் நாளை (நவ.30) மெட்ரோ ரெயில் சேவை வழக்கம்போல் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரெயில் நிலைய படிக்கட்டுகளை பயணிகள் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறுவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உதவிக்கு 1860 425 1515 என்ற எண்ணுக்கும், பெண்கள் 155370 என்ற எண்ணுக்கும் அழைக்க மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புயல் எதிரொலி - சென்னையில் 13 விமானங்கள் ரத்து
புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 13 விமான சேவை ரத்துசெய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து இரவு 7.25 மணிக்கு மங்களூருவுக்கு புறப்பட வேண்டிய விமானம் மற்றும் இரவு 8.50 மணிக்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
அதேபோல கொல்கத்தா, ஐதராபாத், புவனேஸ்வர், புனே நகரங்களுக்கு செல்லும் 9 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மேலும், மங்களூரில் இருந்து இரவு 11.10 மணிக்கு சென்னை வரும் விமானம் மற்றும் இரவு 11.30 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும் ரத்துசெய்யப்பட்டு உள்ளன.
விமான புறப்பாடு நேரத்தை அறிந்துகொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு பயணிகளுக்கு விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தமிழகத்தை நெருங்குகிறது பெஞ்சல் புயல்
பெஞ்சல் புயல் தமிழகத்தை நோக்கி 15 கி.மீ. வேகத்தில் நெருங்கி வருகிறது. நாகைக்கு கிழக்கே 240 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கி.மீ. தொலைவிலும் உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்
நாளை சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மழையை பொறுத்து தேவை ஏற்பட்டால் பேருந்து சேவையில் மாற்றம் செய்யப்படும் எனவும் மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.