முல்லைப் பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழுவினர் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழுவினர் ஆய்வு செய்தனர்.;

Update:2025-03-23 09:40 IST
முல்லைப் பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழுவினர் ஆய்வு

தேனி,

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அணை பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால், கேரள அரசு போட்டுள்ள முட்டுக்கட்டையால் பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இதற்கிடையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ், கடந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து உரிய ஆலோசனைகள் வழங்குவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, 7 பேர் கொண்ட புதிய மேற்பார்வைக்குழு அமைக்கப்பட்டது. இந்த புதிய குழுவின் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவில் தமிழ்நாடு நீர்வளத்துறையின் கூடுதல் செயலாளர் மங்கத் ராம் சர்மா, கேரள நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் டிங்கு பிஸ்வால், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள நீர்ப்பாசனத்துறை தலைமை பொறியாளர் பிரியேஷ், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் விவேக் திரிபாதி, பெங்களூரு அறிவியல் கழகத்தின் அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த் ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த புதிய மேற்பார்வைக்குழுவினர் கடந்த 7-ந்தேதி அணையில் தங்களின் முதல் ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தனர். பின்னர் இந்த ஆய்வு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ஜெயின் தலைமையில், புதிய மேற்பார்வைக்குழுவினர் முல்லைப்பெரியாறு அணைக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பேபி அணை பகுதிக்கு சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள், பலப்படுத்தும் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தனர். பிரதான அணையின் சுரங்கப் பகுதிக்கு சென்று கசிவுநீர் அளவை பார்வையிட்டனர். அணையின் நீர் இருப்புக்கு ஏற்ப அது துல்லியமாக இருந்தது. இதனால் அணை பலமாக இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

அதன்பிறகு அணையில் உள்ள மதகு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மதகுகளை இயக்கிப் பார்த்து சோதனையிட்டனர். அவை நல்ல முறையில் இயங்கின. அணையில் ஆய்வை முடித்து கொண்டு அக்குழுவினர் பகல் 2 மணியளவில் தேக்கடிக்கு திரும்பினர். தேக்கடியில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்தின் ராஜீவ்காந்தி கூட்டரங்கில், மேற்பார்வைக்குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. குழுவின் தலைவர் அனில் ஜெயின் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், அணையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் குறித்தும், இனி வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. அணைக்கு தளவாட பொருட்களை எடுத்துச் செல்லும் வல்லக்கடவு சாலை சீரமைப்பு, பேபி அணை பலப்படுத்தும் பணிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்