2026 சட்டசபை தேர்தல் கூட்டணி: பா.ஜ.க. வைத்த முதல் குறி அ.தி.மு.க., அடுத்தது..?
தமிழகத்தில் முக்கிய கட்சிகளை இணைத்துக்கொண்டு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று பாஜக கருதுகிறது.;

சென்னை,
தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவு நேற்று பரபரப்பாக காணப்பட்டது. தமிழகத்தில் சட்டசபை கூட்டம், டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது.டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, "கடந்த மாதம் திறக்கப்பட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை பார்வையிட வந்தேன்" என்று முதலில் தெரிவித்தாலும், இரவு 9 மணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து 1½ மணி நேரம் பேசியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு செல்லும் தகவல் கிடைத்த உடனேயே அதை மோப்பம் பிடித்த தி.மு.க., அவர் யாரை சந்திக்க இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துவிட்டது. அதை சட்டசபையில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவித்தார். அ.தி.மு.க.வின் ஒவ்வொரு நகர்வையும் தி.மு.க. உன்னிப்பாக கவனித்து வருவதை இந்த நிகழ்வு வெளிக்காட்டியது.
மத்திய மந்திரி அமித்ஷாவுடனான இந்த சந்திப்பின்போது, 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதுவும் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதிப்பாதியாக பிரித்துக்கொள்வது என்று அமித்ஷா கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.அதை வைத்து பார்த்தால், அ.தி.மு.க.வுக்கு 117 இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள 117 இடங்களில் பா.ஜ.க.வும், மேலும் அந்தக் கூட்டணியில் இணையும் கட்சிகளும் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆட்சி அதிகாரத்திலும் பங்குவேண்டும் என்று அமித்ஷா கோரிக்கை வைத்துள்ளாராம்.
இதைக் கேட்டுதான் எடப்பாடி பழனிசாமியும் அதிர்ந்து போய்விட்டாராம். அமித்ஷாவை சந்திக்க சென்றபோது முகம் மலர்ச்சியுடன் சென்ற எடப்பாடி பழனிசாமி, பேச்சு வார்த்தைக்கு பிறகு வாடிய முகத்துடன் வெளியே வந்தாராம். அதுவும், வந்த காரில் திரும்பி செல்லாமல் வேறு காரில் திரும்பி சென்றார் என்றும் பரபரப்பாக கூறப்படுகிறது.அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும், தி.மு.க.வுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
காரணம், கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 45.38 சதவீத வாக்குகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அ.தி.மு.க. கூட்டணி 39.72 சதவீத வாக்குகளை பெற்றது. இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 5.66 சதவீதம்தான்.
அப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தே.மு.தி.க. டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்தது. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் தனிக் கூட்டணியை உருவாக்கியது. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது.எனவே, இந்த முறை வாக்குகளை சிதறவிடாமல் கூட்டணியை சரியாக அமைத்துக்கொண்டால், தி.மு.க.வை வீழ்த்திவிட முடியும் என்று பா.ஜ.க. கருதுகிறது. அதே நேரத்தில், நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
எனவே, 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வைத்த முதல் குறியான அ.தி.மு.க. கூட்டணி வளையத்துக்குள் வந்துவிட்டது என்றே கூறலாம். இன்னும் முக்கிய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று பா.ஜ.க. கருதுகிறது. அதே நேரத்தில், வலுவான கூட்டணியாக உள்ள தி.மு.க. கூட்டணியையும் அசைத்து பார்க்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தி.மு.க.வுக்கும் கூட்டணி உடைந்துவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.