மதம் பற்றி அழகான பதிவு : நடிகர் அஜித்தை பாராட்டிய சத்யராஜ்

தமிழ் தேசியம் ஆரியத்தைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர, திராவிடத்தை அல்ல என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-09 02:52 GMT

சென்னை,

சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே தமிழுக்கு அரண்" என்ற கருத்தரங்களில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார்.

அதில் பேசிய அவர், "நான் 15 வயது இருக்கும் போது கலைஞரின் பராசக்தி திரைப்பட வனங்கள் கேட்டபோது, தமிழின் மீது ஆர்வம் வந்துவிட்டது. கலைஞர் மீது காதல் வந்துவிட்டது. ஈழ விடுதலைக்கு பெரிய உத்வேகம் கொடுத்தது திராவிட இயக்கங்கள்தான். ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது ஓகே. தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ரொம்ப ஆபத்தானது. ஆரியம் வந்து திராவிடத்தை எதிர்க்கலாம்..

தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார் இதை பற்றி.. அவரிடம் நான் பேசுவது எல்லாம் சரியா என்று கேட்டால்.. நீ பேசுவதை பார்த்து அவர்கள் கோபப்பட்டால்.. நீ பேசுவது சரி என்றார்.. ஆனால் அவர்கள் சந்தோஷப்பட்டால் நீ தப்பா பேசுகிறாய் என்று அர்த்தம் என்று தெளிவாக சொல்லிக்கொடுத்துவிட்டு போயிருக்கிறார்.

டெக்னாலஜி வளர்ந்து வரும் போது, நமக்கு இருமொழிக் கொள்கை தான் முக்கியம்.. மும்மொழிக் கொள்கை எதற்காக.. மாணவனுக்கு நேரம் என்பது மிகவும் முக்கியம்.. பள்ளிக்கு போய் வரவேண்டும். அதன்பிறகு விளையாட்டு, கொஞ்ச நேரம் டிவி பார்க்கணும்.. அப்படித்தானே வாழ்க்கையை நடத்த முடியும்.. ஏற்கனவே என்னை மாதிரி சரியாக படிக்காதவர்களுக்கு , ஆங்கிலம், கணக்கு படிப்பதே பெரிய தலைவலியாக இருக்கிறது.. இதில் இந்தியையும் படிக்க வேண்டும் என்று சொன்னால் கோபம் வரத்தானே செய்யும்..

தம்பி அஜித் குமார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். பைக்கில் டூர் போவதை பற்றி அந்த வீடியோவில் கூறியிருந்தார். சம்பந்தமே இல்லாத ஒரு மனிதன் மீது கோபம் வருகிறது என்றால்.. அதற்கு காரணம் மதம் தான்.. ஏதோ ஒரு நாட்டுக்கு போகும் போது ஒருவரை பார்க்கிறோம்.. எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் கிடையாது.. ஆனால் அந்த மதம் தான்.. தேவையில்லாமல் ஒரு வெறுப்பை உருவாக்குகிறது என்று அழகான பதிவினை வெளியிட்டிருந்தார் அஜித். அவருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.

சமீபத்தில், மதமும், சாதியும் இதற்கு முன்னர் நீங்கள் சந்திக்காத மனிதர்களைக் கூட வெறுக்க வைக்கும் என நடிகர் அஜித் பேசிய வீடியோ கவனம் பெற்றது. அந்த வீடியோவில் பேசிய அவர், இந்த உலகம் பல்வேறு கலாச்சாரங்களால் நிறைந்தது என்றும், பயணம் மேற்கொண்டால் மட்டுமே அவற்றை உணர முடியும் என்றும் பயணம் ஒருவரை நல்ல மனிதனாக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்