தூத்துக்குடி: ஏரல் தரைப்பாலம் வெள்ளத்தால் சேதம்.. 4-வது நாளாக போக்குவரத்துக்கு தடை

ஏரல் தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

Update: 2024-12-16 04:59 GMT

தூத்துக்குடி,

நெல்லையில் 3 நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடந்த 13-ந் தேதி மதியம் 2 மணி முதல் ஏரல் தாமிரபரணி ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் ஏரல்-குரும்பூர் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆழ்வார்தோப்பு பாலம், ஸ்ரீவைகுண்டம் பாலம் வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.

நேற்று 3-வது நாளாக தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் ஓடியது. இதனால் 3-வது நாளாக நேற்றும் அந்த பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பாலத்தின் இருபுறத்திலும் தடுப்புகளை அமைத்து போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து குரும்பூர், நாசரேத், திசையன்விளை, சாத்தான்குளம் போன்ற ஊர்களில் இருந்து ஏரலுக்கு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் தற்போது குறைய தொடங்கியுள்ளது. ஆனால், 3 நாட்கள் தரைப்பாலத்தில் வெள்ளம் சென்றதால், பாலம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, பாலத்தின் நடுப்பகுதியில் சாலையே இல்லாத அளவுக்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தில் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்திற்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் 4-வது நாளாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்