எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன் - ஆதவ் அர்ஜுனா
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கூறினார்.
சென்னை,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்து வந்த ஆதவ் அர்ஜூனா, சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்ததற்காக தெரிவித்து கட்சியில் இருந்து ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது;
"ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோளாக உள்ளது. அதனை கூறியதற்காக என்னை இடைநீக்கம் செய்தனர். இந்த கொள்கையை என்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக பிரசாரம் மூலமாக கண்டிப்பாக உருவாக்குவேன். எங்கு இணைவது என்பதை விட என்ன செய்யவேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். எதிர்கால திட்டம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து விரைவில் அறிவிப்பேன்."
இவ்வாறு அவர் பேசினார்.