அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் - எல்.முருகன்
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் ஞானசேகரன் என்ற நபரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும். ஒரே ஒரு நபர்தான் குற்றவாளி என்று முடிவு செய்யாமல், முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும்.
மற்ற வழக்குகளைப் போல் இல்லாமல் இந்த வழக்கிற்கு சிறப்பு கவனம் கொடுத்து போலீசார் இதனை விசாரிக்க வேண்டும். தமிழக அரசால் முடியாவிட்டால், வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்."
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.